ஆறுமாதம் முன்பு பிறந்த மகனுக்கு
ஆறுமுகனின் பெயரை இட்டோம்
அப்பனுக்கு உபதேசிக்கிறான் நாளும்
அப்பப்பா ஆனந்த மழையில் நனைகிறேன் நிதமும்
(முருகன் தன் அப்பன் சிவனுக்கு உபதேசித்ததாக புராணம் உண்டு)
1.ஒன்றே செய் நன்றே செய் அதை இன்றே செய்
பல்லில்லாத பாலகன் செயலால் உணர்த்துகிறான்
பல்பணியாக்கம் (multitasking) செய்யும் அவசர உலகில்
ஒரே வேலையில் கவனத்தைக் குவித்தால்
ஒருசேர வாகைகள் குவியுமே
(வெற்றி அணிந்த மன்னர் அணிவது வாகை மலர்)
2.விடாமுயற்சி
விளையாட்டுப் பொருளை எடுக்க விடாமுயற்சி
சளையாமல் முயல நாம் எடுக்க வேண்டும் மனப்பயிற்சி
துவளாமல் தோல்விகள் பல எதிர் கொண்டு
தவழ்வான் மகிழ்வான் ஊக்கத்துடன் வெற்றி கண்டு
(சளையாமல் = சளைக்காமல் = without getting tired
துவளாமல் = வாடாமல் = without getting sad)
3.உடற்பயிற்சி
ஓரிடத்திலேயே அமர்ந்திருந்தால் வாராது இன்பம்
ஓடியாடிக் களித்திருந்தால் நேராது துன்பம்
உண்ணுவது உடற்பயிற்சிக்கு என்று உணர்ந்தால்
நண்ணுவது நோயற்ற வாழ்வே என்று உணர்த்துகிறான்
(நண்ணுதல் = கிட்டுதல், get)
4.தேவைக்கேற்ப உணவும் உறக்கமும்
சுவைக்காக அளவுக்குமீறி உண்பானும் இலன்
கேளிக்கைக்காக உறக்கத்தைக் குறைப்பானும் இலன் - அவனைப் போல்
தேவைக்கேற்ப உணவும் உறக்கமும் கொண்டால்
தேகம் நன்றி நவின்றிடுமே
(இலன் = செய்யாதவன்
நவில்தல் = சொல்லுதல்)
5.அறியும் ஆர்வம்
அதை அறிந்து கொண்டால் அங்கீகாரம் கிட்டுமா என்று கருதான்
இதைத் தெரிந்து கொண்டால் திரவியம் கொட்டுமா என்று எண்ணான்
மெய் ஆர்வத்தால் மகிழுந்துகளைக் காண்பான் தினமும்
பொய்கையில் பறவைகளை உற்றுப் பார்ப்பான் - (அதுபோல்) நாமும்
மதிப்பெண்களைக் கடந்து மதிநுட்பத்தை வளர்ப்போம்
நாணயங்களை மறந்து நாட்டத்தை நட்டு வைப்போம்
எண்ணங்களை மாற்றி ஏற்றத்தைப் பெறுவோம்
ஒட்பம் ஓங்கவே மனிதத்தை முன்னேற்றுவோம்
(கருதான் = கருத மாட்டான்
எண்ணான் = எண்ண மாட்டான்
திரவியம் = செல்வம்
மகிழுந்து = car
பொய்கை = குளம்
மதிநுட்பம் = intelligence
நாட்டம் = interest
ஒட்பம் = கூர்மையான அறிவு
மனிதம் = humanity)
6.புன்முறுவல்
அன்பு நெஞ்சங்கள் அருகிலிருந்தால் முகமலர்ச்சி
குழந்தைப் பாடல்கள் கேட்டால் முகிழ்நகை
குளிக்கும் தொட்டியைக் கண்டால் குதூகலம்
ஆடலைக் கண்டால் ஆனந்தம் - அதுபோல்
சிறுசிறு வெற்றிகளையும் நாம் கொண்டாடினால்
வாழ்க்கை ஒரு திருவிழா தான்
எளிதாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டால்
எப்போதும் கொண்டாட்டம் தான்
(முகிழ் = மொட்டு, bud
நகை = சிரிப்பு
முகிழ்நகை = புன்முறுவல் = smile
)
No comments:
Post a Comment