Wednesday, November 27, 2019

எங்கள் ஐயா

வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை தான் எப்போதும்
செல்வம் சேர்ந்தாலும் அலட்டிக் கொண்டதில்லை ஒருபோதும்
இரண்டாம் வகுப்பில் தான் ரயில் பயணம்
இரவு பகல் பாராமல் உழைத்துப் பெற்ற செல்வத்தில் என்றும் கவனம்

ஆறு பிள்ளைகள் மணம் முடித்துக் கொடுத்தவராம்
அறுபது அகவையிலும் நிறுவனத்தைத் திடமாக நடத்தியவராம்
சிறு வயதில் தந்தையை இழந்த போதும்
சீர்மிகு திறத்தோடு நிர்வாகம் செய்தவராம் 

தாய் தந்த தைரியமே மூலதனமாய்க் கொண்டு
தன் முயற்சியால் உலகத்தினை வென்று 
ஆக்கத்திற்கு அழுத்தமாகக் காண்பித்தீர்கள் சான்று
ஊக்கமாகப் பின்பற்றுகிறோம் பேரன் பேத்தியர் இன்று

அருள் ஆசிகள் வேண்டி வணங்குகிறோம்

28.11.2019

Sunday, November 24, 2019

அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து

தினம் காலையில் பம்பரமாய்ச் சுற்றி
பொறுப்பும் பொறுமையுமாய் வேலைகளைச் செய்து
தன்னைப்போல் சமர்த்தாய் பிள்ளைகளை மாற்றி
அன்பும் அரவணைப்புமாய் வாழ்க்கையைச் செய்து
இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ
இப்பிறந்தநாளில் வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்!

November 24 2019

Saturday, November 16, 2019

ஆயா வீடு

ஒவ்வொரு ஆண்டும் கூடி களித்தோம் ஆயா வீட்டில்
ஓராயிரம் ஆட்டம் ஆடி கழித்தோம் அந்தக் கூட்டில்
திரைப்படம் விதம் விதமாகப் கண்டு களித்தோம் ஆயா வீட்டில்
திரைப்பா நிதம் இதமாகப் பாடிப் பூரித்தோம் அந்தக் கூட்டில்

சுற்றம் அகமும் முகமும் மலர நாமும் மகிழ்ந்தோம்
சுற்றும் உலகும் வாழ்த்த நாமும் வாழ்ந்தோம்
சற்றும் குறைவின்றி உண்டு களித்தோம்
காற்றும் சமையல் மணத்தால் நிறைந்திட திளைத்தோம்

உறவினர் கூடினால் கேட்கவும் வேண்டுமா
உற்றார் மகிழ்ந்திட நம் உவகைக்குப் பஞ்சமா
பணம் என்றும் கொடுத்ததில்லை இன்பம் - மற்றவர்
மனம் மலர்ந்தால் என்றென்றும் ஆனந்தம்

ஆண்டுக்கு ஒருமுறை மீண்டும் இணைந்திடுவோம்
சென்ற கால நினைவுகளை மீட்டு எடுத்திடுவோம்
நம்முள் என்றும் மங்காது பாசம்
நேரில் கூடினால் தேங்காது சந்தோசம்


Thursday, September 19, 2019

என் இதயத்தின் அரசியே வருக

ஏந்திழை வருகிறாள் நாடு கடந்து
காந்தமாய் ஈர்த்திடுவாள் வீடு புகுந்து
பாந்தமாய்ப் பார்த்திடுவாள் கூடு அடைந்து
சாந்தமாய்ச் சேர்ந்திடுவாள் காடு நுழைந்து

தாங்கிடுவேன் தோளில் அவள் சாய்ந்திட
தூங்கிடுவேன் மார்பில் அவள் சேர்ந்திட
வாங்கிடுவேன் கூந்தலில் மலர் நிறைந்திட
குலுங்கிடுவேன் மனதில் மகிழ்வு மலர்ந்திட

என் இதயத்தின் அரசியே வருக!
என் இல்லத்தில் அன்பு சிறக்க வருக!
என் உள்ளத்தில் உவகை பிறக்க வருக!
இன்ப வெள்ளத்தில் தினம் திளைக்க வருக!


----------------------------------

19.9.19
 அழகுவின் அமெரிக்க வருகையின் போது எழுதியது.
 நான்காவது வரி Florida காட்டைக் குறிக்கும்.

பொருள்:
ஏந்திழை
பாந்தமாய்
உவகை
 

Wednesday, August 14, 2019

என் வாழ்வின் வசந்த காலம்

ஜன்னலோரம் பார்க்கிறேன்
சூரியன் கூட உன் எழில் கண்டு கண் கூசுகிறான்
முகிலின் பின் ஒளிகிறான்

உன்தன் மென்னடை கண்டு
முகிலினமும் நாணிடும்
கார்மேகமாய் உருமாறிடும்
முத்துச்சாரலாய்ப் பொழிந்திடும்

மாரியெனப் பொழியும்
உனது பேரன்பைக் கண்டு
சாரல் மழையும் மகிழ்ந்திடும்
பூக்களும் பூத்துக் குலுங்கிடும்

தன்னைக் காணுமுன் மலர்ந்த
விந்தையைக் காண வந்த நிலவு
நின்றன் திருமேனி கண்டு
வெப்பம் கொள்ளும் பொறாமையால்

நீ என் இருள் நீக்கும் புலரி
இந்த முத்துவை நனைக்கும் மாரி
நீ என் இதயத்தின் எழில் கோலம்
நீ என் வாழ்வின் வசந்த காலம்

தவம்

தவம் ஏதும் புரியாமல்
நீ  வாய்த்தாய்
இது எப்படியென்று புரியாமல்
நான் வியந்தேன்

சேரும் நாள்

அணைக்கின்ற தோள்கள்
அனலான தேகம்
மையல் கொண்ட இதழ்கள்
மோகம் கொண்ட பொழுதுகள்
இவையனைத்தும் நினைத்து ஏங்கினேன்
சேரும் நாள் தொலைவில் இல்லை எனத் தூங்கினேன்

என் மனைவி

நல்லுறவுகளை வலுப்படுத்தினாள்
நட்பு வட்டத்தினுள் நடுமைப்படுத்தினாள்

ஊண் உயிர் காதலில்
ஊற வைத்தாள்
பேரன்பின் ரசம்
பருகக் கொடுத்தாள்

மிளிரும் மேனியால்
மயக்கும் பார்வையால்
தேன் சொட்டும் மொழிகளால்
தேகமெங்கும் உணர்ச்சியால்
உள்ளம் கவர்ந்தாள்
உயிரில் கலந்தாள்

தேனுக்கே இனிப்பா?

என்னுடைய தேனுக்கு இனிப்பா கொடுப்பேன்?
அமுதத்தை மிஞ்சும் முத்தத்தைக் கொடுப்பேன்
அதில் காதல் ரசம் சொட்டச் சொட்டக் கொடுப்பேன்
முதுமையிலும் முதிராத உள்ளன்பைக் கொடுப்பேன்

திருமந்திரம் சொன்னாற் போல்
அன்பே சிவம் என்பேன்
மந்திரத்தால் ஈர்ப்பது போல்
அவளது அன்பே சுகம் என்பேன்

பெருமை

மனம் தனைப் புரிந்து கொள்
மணம் கொண்டவனே
நான் பூச்சூடினால்
மணம் தனைப் புகழ்

நான் சேலை அணிந்தால்
நிறம் தனை ரசி
நான் சமைத்தால்
ரசித்துக் கொண்டே புசி

ஊடல் கொண்டால்
கவிதை ஒன்றை வாசி
கூடல் கொண்டால்
உயிர் மூச்சனைத்தும் சுவாசி

கூறாமலே இவையனனத்தும் செய்தால்
என் உள்ளம் உவப்பு கொள்ளும்
இயல்பாக சிரிப்பேன் - மொத்தத்தில்
நான் நானாக இருப்பேன்

அதற்காக நீ உன்னை இழக்க வேண்டாம்
நீ நீயாகவே இரு
கொஞ்சம் புரிந்து கொள்
அது போதும் என்றாள்

கோபம் கொண்ட வேளையிலும்
கோதையின் மனப் பக்குவம் கண்டு
அகம் மகிழ்ந்தேன்
ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன்

பெருமை கொண்டேன்
பேரின்பத்தின் எல்லை கண்டேன்