Tuesday, December 15, 2020

தமக்கை மகன் வருணுக்கு எட்டாவது பிறந்தநாள்

ஓட்டமும் ஆட்டமுமாய்  நண்பர்களுடன் களித்து

நாட்டம் கொண்டவற்றில் நாட்களைக் கழித்து

எட்டாம் அகவையை தொட்ட வருண்

எட்டாத உயரங்களைத் தொட்டுவிட வாழ்த்துகிறோம்

Sunday, December 6, 2020

ஊடு பாவாய் அமைந்த பாடலும் அதன் இலக்கிய அழகும்

 
நீங்கள் கவிஞர் யுகபாரதி இயற்றிய "என் அன்பே நானும் நீயின்றி நான் இல்லை" என்ற பாடலை ஹாரிஸ்  ஜெயராஜின் மெல்லிசையுடன் கேட்டு  ரசித்திருக்கக் கூடும். பாடல் முழுவதும் எதுகை, மோனை, இயைபு (rhyme) என்று விளையாடி இருப்பார் யுகபாரதி.

என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை:

ஊடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே

ஊடு பாவாய் என்பது கவித்துவமான ஒரு உவமை. நெய்தலுக்கு ஊடு நூலும் பாவு நூலும் மிகவும் அவசியம். அதைப் பற்றி அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை ( இணைப்பு=தொடுப்பு=கொழுவி = web link) சொடுக்கிப் பாருங்கள்:
இந்தத் தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் போல ஊடு நூலும் பாவு நூலும்  பின்னிப் பிணைந்து இருந்தால் தான் ஆடை நெய்ய முடியும்.

அந்த ஊடு நூலும் பாவு நூலும்  பின்னிப் பிணைந்து இருத்தல் போல என்னுடைய தேகமும் காதலும் ஒன்றுடன் ஒன்றுபட்டு கிடைக்கிறது என்கிறார் கவிஞர் யுகபாரதி.

அடுத்த வரியில் கூடு பாய ஆசை - அதாவது என் உடல் என்னும் கூட்டை விட்டு உன் உடல் என்னும் கூட்டுக்குள் நுழைய ஆசையாக உள்ளது  என்று அந்தப் பெண் பாடுகிறாள்.

இந்த இரு வரிகளில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள இலக்கிய நயத்தை கவனியுங்கள்:
எதுகை:
டு - கூடு
தேத்தோடு - தாத்தோடு

மோனை:
பாவாய் - பாயும்

இயைபு:
தேகத்தோடு - தாகத்தோடு
ஓடுதே - மோதுதே

செந்தொடை:
டு - கூடு
காதல் - சை
டுதே - மோதுதே
டுதே - மோதுதே

இந்த இரு வரிகள் மட்டுமல்ல பாடல் முழுவதுமே இவ்வாறாக இலக்கிய நயத்துடன் அமைந்துள்ளது. பாடலின் வரிகள் முழுவதையும் படித்து மகிழ கீழே கொடுக்கப்பட்டுள்ள  கொழுவியை (link) சொடுக்கவும்:
(பின்குறிப்பு: ஆனால், மேற்கண்ட கொழுவியில் சில பிழைகள் உள்ளன. கவிஞர் பெயரும் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.)
 
இந்தப் பாடலைக் கண்டு மன ஊக்கம் (inspiration) கொண்டு நான் முன்பு எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு:
நான் அடிக்கடி கவிதைகள் புனைபவன் (புனைதல் = write poem)இல்லை ஆதலால், இதை எழுதி முடிக்க வெகு நேரம் ஆனது.

Thursday, December 3, 2020

கார்குழல் கடவையே பாடலின் பொருள்

 


படத்தின் பெயர்:
வடசென்னை
வருடம்:
2018
பாடலின் பெயர்:
கார்குழல் கடவையே
இசையமைப்பாளர்:
சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்:
விவேக்
பாடகர்:
சந்தோஷ் நாராயணன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய் நாராயண், அனந்து, பிரதீப் குமார் 

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காழக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்
கார்குழல் (கருங்கூந்தல்) கொண்ட இந்த அழகியின் பின்னால் நான் எங்கே செல்கிறேன் என்று தெரியாமல் ஒரு காதல் மயக்கத்தில் சென்று கொண்டிருக்கிறேன் (கடவை = பாதை). இந்த சேலை (காழகம்) கட்டிய பெண்ணின் வழியில் சென்று கனவுலோகத்தில் மிதக்கிறேன்.

கண்ணாடிக் கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
சீன அரசர் சென்னாங் ஒரு கோப்பையில் கொதிக்க வைத்த நீரை குடிக்கும் போது, அருகிலிருந்த தேயிலைகள் வந்து எதேச்சையாக விழுந்து விடவே, அதனுடன் சேர்த்து பருகி உலகிலேயே முதன்முதலில் தேநீர் பருகும் மனிதரானார் என்று நம்பப் படுகிறது. (ஆனால் இது வெறும் கட்டுக்கதை (myth) என்று விக்கிமூலம் குறிப்பிடுகிறது. மூலம்: https://en.m.wikipedia.org/wiki/History_of_tea). 

அது போல உன் வாழ்வில் எதிர்பாராத வண்ணம் நான் சேரவே நம் வாழ்க்கை இன்பமானது.

(ஆழி = கடல். ஆனால், இங்கு நீர் என்று பொருள்படும்படி பயன்படுத்தியுள்ளார்.)

கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
கன்னங்களைக் கைகளால் மூடி சோகமாக ஒரு ஓரமாய் நீ நின்றால் அன்று எனக்கு மிகுந்த துக்கமான நாள் ஆகும்.

கிளியே! நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய் உன் விழியே கேட்கிறேன்
உளியே! உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்
கிளி போல அழகாய் இருப்பவளே! நீ என்னை விட்டு நீங்கினால் நான் இறந்து விடுவேன். எனக்குள் இருக்கும் காதல் நெருப்பு எரிய விறகாய் உன் விழிகளைக் கேட்கிறேன். உளி ஒரு சாதாரண கல்லை சிலை ஆக்குவது போல் நீ என்னை செதுக்கி கொண்டிருக்கிறாய் - நீ என்னை செதுக்குவதை ஏற்கிறேன். உனக்காக என் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறேன்.

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காழக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்

இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை செய்தனள் என்கிறேன்
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடித் திறந்ததனள் என்கிறேன்
இந்நேரம் வானத்தில் மின்னல்களை நான் பார்த்தால் நீ புன்னகை சிந்தியதால் வந்த ஒளிக்கீற்று தானோ என்றே எண்ணுகிறேன். நீ கண் மூடித் திறந்தாலே என்னுடைய நெஞ்சில் பூகம்பம் தாக்குகிறது.

கார்குழல் கடவையே என்னை எங்கே
காழக வழியிலே கனவுகள்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

கிளியே! நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய் உன் விழியே கேட்கிறேன்
உளியே! உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காழக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்

இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை செய்தனள் என்கிறேன்
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடித் திறந்தனள் என்கிறேன்

உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பற்றும் காற்று
உன்னுடைய அடாவடித்தனத்தைப் (கொட்டம்) பார்த்து, உன் பூவின் வட்டம் பார்த்து,  உன் கண்களின் விட்டம் (diameter) ஆகியவற்றைப் பார்த்து காற்றுக்கூட தீப்பற்றிக் கொள்ளும்.

தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து
தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று
உன் தோலில் இருக்கும் மச்சத்தைப் பார்த்து, உன் உடலில் முன் கண்டிராத மிச்சத்தையும் பார்த்து, இணையும் போது உன் உடலிலிருந்து சிந்தும் தேன் போன்ற லட்சம் துளிகளைப் பார்த்து, போதை அடித்தாற்போல் என் நடை சீராக இல்லாமல் போனது (பிழறிற்று).

இணையாய் உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்
உன்னுடைய இணையாய் என்னையே நான் வழிமொழிகிறேன் (recommend செய்கிறேன்).

எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லாள் எங்கே
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே
எங்கே? நெஞ்சில் நல்லாள் (நல்லதை மட்டும் எண்ணுபவள்) எங்கே? இன்பம் தரக்கூடிய எல்லாவற்றையும் மிஞ்சும் இல்லத்தரசி (இல்லாள்) எங்கே? எங்குமே வஞ்சம் (hatred) இல்லாதவள்(அல்லாள்) எங்கே? வெற்றி பெற்று, கொன்றை மலர்  மாலை சூடும் தலைவனைக் கொஞ்சும் சிறிய (சில்) பெண் எங்கே?

போரில் வெற்றி பெற்ற மன்னர்களுக்கு தமிழ் புத்தாண்டு அன்று சரக் கொன்றை மலர்களால் மாலை அணிவித்து அவர்களைக் கவுரவம் செய்வது தமிழர் பாரம்பரியத்தில் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. (மூலம்: https://m.dinamalar.com/detail.php?id=1751912)

கிளியே! நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய் உன் விழியே கேட்கிறேன்
உளியே! உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்

கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காழக வழியிலே கனவுகள்

Friday, November 27, 2020

வெய்யோன் சில்லி பாடலின் பொருள்

 


படத்தின் பெயர்:
சூரரைப் போற்று
வருடம்:
2020
பாடலின் பெயர்:
வெய்யோன் சில்லி
இசையமைப்பாளர்:
ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்:
விவேக்
பாடகர்:
ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்

பாடல்களில் தூய தமிழ் வார்த்தைகளைச் சேர்ப்பதில் கவிஞர் விவேக் வல்லவர்.
"கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்" (அதன் பொருள் என்னுடைய அடுத்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது:
http://muthusblog.blogspot.com/2020/12/blog-post.html?m=1) போன்ற பாடல்களை எழுதியவர். வெய்யோன் சில்லி பாடல் புரிந்துகொள்ள சற்றே கடினமானது. அதன் பொருளைத் தெரிந்து கொள்ள இணையத்தில் தேடினேன். சரியான பொருள் கிடைக்காததால் நானே எழுதியிருக்கிறேன்:

ஆண் : சீயஞ் சிறுக்கிகிட்ட
சீவன தொலைச்சிட்டேன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்

சீயம் = இனிப்புப் பண்டம்
வளவி = வளையல்
சீயம் போன்ற இனிய பெண்ணிடம் என் ஜீவனைத் தொலைத்துவிட்டேன். அவளது வளையலுக்குள் மாட்டிக் கொள்ள வளைந்து விட்டேன் (அதாவது அவளது கைப்பிடியில் நான் சிக்கி விட்டேன்).

உள்ள பட்டறைய போட்டுட்டு
ஏழரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்கிட்டு
இவ வீதியில் வாரத
வேடிக்கை பாக்கத்தான்
விழுந்த மேகங்க எம்புட்டு

எனக்குள்ளே பட்டறை போட்டு அமர்ந்துவிட்டாள் (அவள் நினைவாகவே இருக்கிறேன்). ஏழரைச் சனியைக் (தொல்லையை) கூட்டி விட்டு அவள் போய்விட்டாள். இவள் வீதியில் சென்றால் மேகங்கள் கூட  இவளைப் பார்க்க வந்துவிடும் - இவள் அவ்வளவு அழகு.

இடுக்கியே
இடுக்கியே
அடிக்கிறா
அடுக்கியே 

இடுக்கி (tongs) போல வளைவு நெளிவுகள் கொண்ட பெண்ணே! என் மனதின் நினைவலைகளை அடித்து விட்டுச் செல்கிறாயே!

வெய்யோன் சில்லி 
இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா

சூரியனின் (வெய்யோன் = சூரியன்) துண்டு (சில்லி) போன்றவள் (என் வாழ்வுக்கு ஒளி கொடுக்க வந்தவள்), தான் இருக்கும் வானத்தை விட்டு விட்டு, இப்போது நிலத்தில் வந்து  கட்டிக்கொள்ள சொல்லி அனத்துகிறாள் (நச்சரிக்கிறாள்).  கேலியாகப் (லந்தாக) பேசி என்னை அவள் பக்கம் ("ஒரு அண்டை" என்றால் "ஒரு புறமாக" என்று சென்னை பாஷையில் பொருள்) இழுக்கிறாள்.

கட்டாரி கண்ணாலே 
உட்டாளே தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால 
மப்பாகிக் கெடக்குறேன்

கட்டாரி (குத்துவாள்) போன்ற கண்களாலே என் இதயத்திற்கு உள்ளே நுழைந்து விட்டாள். நான் செய்வதறியாது நிற்கிறேன்.
ஒட்டாரம் (பிடிவாதம்) கொண்ட இந்த சிறிய பெண்ணால் நான் போதை உட்கொண்டது போல மயங்கிக் கிடக்கிறேன்.

என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

என் உயிருக்குள் நுழைந்துகொண்டு அரக்கி போல சிரிக்கிறாள். அவள் இடுப்பினில் என்னை முடிந்துகொண்டு திமிராக நடக்கிறாள்.

மல்லாட்டை ரெண்டா
என்னாட்டம் வந்தா
ஓய்

மல்லாட்டை (= நிலக்கடலை = வேர்க்கடலை) இரண்டு போல என்னை ஈர்க்கும் கச்சையணிந்த மார்பகங்களுடன் என்னிடம் வந்தாள். 

என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

என் காது ஜவ்வுல
இசையும் ஒவ்வல
நீ மட்டும் பேசடி
ஏழட்டும் நாளட்டும்
எதுவும் உண்கல
இச்சொன்னு வீசடி

என் காதுச் சவ்வுகளில் இசை கூட (ஒவ்வுதல் = பொருந்துதல்) பொருந்திப் போகவில்லை (did not fit in),  நீ பேசும் ஓசை தான் இசையாக  ஒலிக்கிறது. ஏழு, எட்டு நாட்களாக ஒன்றும் உண்ணவில்லை (உண்கல), ஒரு முத்தத்தைக் கொடுத்து விட்டுப் போ.

கன்னலு உதடு
மின்னலு தகடு
எனக்குத் தானடி
 
கன்னல் ( கரும்பு) போன்ற உன் உதடுகளும், மின்னலால் செய்த தகடு போன்ற உன் விழிகளும் எனக்குத்தான் சொந்தம். 

சட்டையில் பாக்கெட்ட தச்சது
உன்னைய பதுக்கதானடி

என் சட்டையில்  பை வைத்ததே உன் புகைப்படத்தைப் பதுக்குவதற்குத் தான்.
என் நெஞ்சில் நீ இருப்பது மற்றவர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சட்டையில் பை வைத்தார்கள் என்றும் பொருள் கொள்ளலாம். 

தின்னா - ஆணம் வெச்சு தின்னா

தின்றாள் - கறிக் குழம்பு (ஆணம்=குழம்பு) வைத்து தின்பது போல் என் உயிரை உண்டாள். 

உள்ள உன் கொக்காமக்கா நின்னா

என் மனதிற்குள் அவள்  திடமாக நின்றாள்.

ஓய்
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

தொரட்டி கொரல பெரட்டி எவ்வியே
இதயம் பறிச்சியே
கரண்டு கம்பிய சொரண்டி
கெடந்த கதண்ட எரிச்சியே

தொரட்டிக் (கைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும்  பழங்களைப் பறிக்க/ கிளைகளை வளைத்து கொடுக்க உபயோகப்படுத்தப்படும்  கொக்கிக்கோல்) குச்சியைப் புரட்டி (twist) எம்பி (jump) பழம் பறிப்பது போல் என் இதயத்தைப் பறித்து விட்டாய். 
மின்கம்பியில் உட்காரும் கருவண்டை (கதண்டு = கருவண்டு) மின்சாரம்  எரிப்பது போல் உன் மேல் கொண்ட காதலால்  ஈர்க்கப் பட்டேன் இப்போது என்னையே இழந்து விட்டேன்.

ஓ பதனம் உதற
கவனம் செதற
மனச கலைச்சியே

என் பதனம் (அமைதி) சென்றுவிட, என் கவனம் சிதறிவிட என் மனதைக் கலைத்தாய்  உன் ஈர்ப்பால்.

கருக்கப் பொழுதில்
சிரிச்சுத் தொலைச்சு
பகலப் படைச்சியே

இரவு நேரத்தில் (கருத்த பொழுதில்) நீ சிரிக்கையில் உன் பற்களின் பிரகாசத்தால் பகல் போல் ஆனது. 
என் வாழ்வு இருண்ட பொழுது போல இருந்தது நீ வரும் வரை - உன்னுடைய சிரிப்பைக் கண்டதும் பகல் போல் ஆனது என்றும் பொருள் கொள்ளலாம்.
 
தீயா இவ வந்தா
மண்டவெல்லம் துண்டா
உண்டா இந்த ஜிகர்தண்டா?

தீயாக என் வாழ்வில் இவள் வந்தாள். மண்டை வெல்லம் (அச்சு வெல்லம்) துண்டு போல வந்தாள். ஜிகர்தண்டா போல இனிப்பான இவள் எனக்கு தானா?

ஓய்
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா

கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகிக் கெடக்குறேன்

Saturday, September 19, 2020

குமரனின் ஆறு மாதங்களில் ஆறு பாடங்கள்

ஆறுமாதம் முன்பு பிறந்த மகனுக்கு
ஆறுமுகனின் பெயரை இட்டோம்
அப்பனுக்கு உபதேசிக்கிறான் நாளும்
அப்பப்பா ஆனந்த மழையில் நனைகிறேன் நிதமும்

(முருகன் தன் அப்பன் சிவனுக்கு உபதேசித்ததாக புராணம் உண்டு)

1.ஒன்றே செய் நன்றே செய் அதை இன்றே செய்
பல்லில்லாத பாலகன் செயலால் உணர்த்துகிறான்
பல்பணியாக்கம் (multitasking) செய்யும் அவசர உலகில்
ஒரே வேலையில் கவனத்தைக் குவித்தால்
ஒருசேர வாகைகள் குவியுமே

(வெற்றி அணிந்த மன்னர் அணிவது வாகை மலர்)

2.விடாமுயற்சி
விளையாட்டுப் பொருளை எடுக்க விடாமுயற்சி
சளையாமல் முயல நாம் எடுக்க வேண்டும் மனப்பயிற்சி
துவளாமல் தோல்விகள் பல எதிர் கொண்டு
தவழ்வான் மகிழ்வான் ஊக்கத்துடன் வெற்றி கண்டு

(சளையாமல் = சளைக்காமல் = without getting tired
துவளாமல் = வாடாமல் = without getting sad)

3.உடற்பயிற்சி
ஓரிடத்திலேயே அமர்ந்திருந்தால் வாராது இன்பம்
ஓடியாடிக் களித்திருந்தால் நேராது துன்பம்
உண்ணுவது உடற்பயிற்சிக்கு என்று உணர்ந்தால்
நண்ணுவது நோயற்ற வாழ்வே என்று உணர்த்துகிறான்

(நண்ணுதல் = கிட்டுதல், get)

4.தேவைக்கேற்ப உணவும் உறக்கமும்
சுவைக்காக அளவுக்குமீறி உண்பானும் இலன்
கேளிக்கைக்காக உறக்கத்தைக் குறைப்பானும் இலன் - அவனைப் போல்
தேவைக்கேற்ப உணவும் உறக்கமும் கொண்டால்
தேகம் நன்றி நவின்றிடுமே

(இலன் = செய்யாதவன்
நவில்தல் = சொல்லுதல்)

5.அறியும் ஆர்வம்
அதை அறிந்து கொண்டால் அங்கீகாரம் கிட்டுமா என்று கருதான்
இதைத் தெரிந்து கொண்டால் திரவியம் கொட்டுமா என்று எண்ணான்
மெய் ஆர்வத்தால் மகிழுந்துகளைக் காண்பான் தினமும்
பொய்கையில் பறவைகளை உற்றுப் பார்ப்பான் - (அதுபோல்) நாமும்
மதிப்பெண்களைக் கடந்து மதிநுட்பத்தை வளர்ப்போம்
நாணயங்களை மறந்து நாட்டத்தை நட்டு வைப்போம்
எண்ணங்களை மாற்றி ஏற்றத்தைப் பெறுவோம்
ஒட்பம் ஓங்கவே மனிதத்தை முன்னேற்றுவோம்

(கருதான் = கருத மாட்டான்
எண்ணான் = எண்ண மாட்டான்
திரவியம் = செல்வம்
மகிழுந்து = car
பொய்கை = குளம்
மதிநுட்பம் = intelligence
நாட்டம் = interest
ஒட்பம் = கூர்மையான அறிவு
மனிதம் = humanity)

6.புன்முறுவல்
அன்பு நெஞ்சங்கள் அருகிலிருந்தால் முகமலர்ச்சி
குழந்தைப் பாடல்கள் கேட்டால் முகிழ்நகை
குளிக்கும் தொட்டியைக் கண்டால் குதூகலம்
ஆடலைக் கண்டால் ஆனந்தம் - அதுபோல்
சிறுசிறு வெற்றிகளையும் நாம் கொண்டாடினால்
வாழ்க்கை ஒரு திருவிழா தான்
எளிதாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டால்
எப்போதும் கொண்டாட்டம் தான்

(முகிழ் = மொட்டு, bud
நகை = சிரிப்பு
முகிழ்நகை = புன்முறுவல் = smile
)

Tuesday, June 16, 2020

அக்கா மகள் தியாவின் மூன்றாவது பிறந்தநாள்

ஆழமான குரலில் பாடும் அரும்பு
அழகாய்ச் சிரிக்கும் கட்டிக் கரும்பு
தன் கையாலே உண்ணும் கெட்டிச் சமர்த்து
தமையன் செய்வது அனைத்தும் செய்யும் சுட்டிக் குறும்பு

பூங்காவில் வித்தைகள் செய்வாள்
பாங்குடன் வேண்டியவை பெறுவாள்
திங்கள் செல்வது அறியா வண்ணம் இன்புறுவாள்
எங்கள் குலமகள் உரிமையுடன் விளையாட அழைப்பாள்

கால் வைத்த இடமெல்லாம் குதூகலம் பொங்கிடும்
பால் பற்கள் மின்னிடவே சிரிப்பொலி முழங்கிடும்
அனைவரையும் அன்பாலே ஈர்த்திட்டாய் மருமகளே
ஆனந்தமாய் வாழ்ந்திடு என்றென்றும் திருமகளே

Tuesday, April 7, 2020

குமரன் உதயம்

நெய் நந்தி தான் மகா சனிப்பிரதோஷத்தன்று தோன்றினானோ
நெஞ்சம் நெகிழவே மகிமை கொண்ட அமுதன் (முருகன்) அருளினானோ
சுகப்பிரசவத்தில் தான் பிறப்பேன் என்று போராடிப் பிறந்தானோ
சுகம் உண்மையில் எது என்று உணர்த்தவே உதித்தானோ

ஆத்தா அப்பச்சியின் அன்பில் நனைந்திட முகிழ்த்தவனோ
ஆயா ஐயா நேசத்துடன் அணைத்திட மகிழ்பவனோ
அப்பத்தா ஐயா அன்றாடம் நினைத்திட மகவாய்ப் பிறந்தானோ
அத்தை மக்களும் தாய் மாமனும் திளைத்திடக் கண் திறந்தானோ

பாட்டி ஆயா ஐயா பெருமிதம் கொள்ள
தாய் வழிப் பாட்டன்மார்கள் பாசம் அள்ள
ஈன்றவள் ஆனந்தக் கண்ணீர் சிந்த
பெற்றவன் பூரிப்புடன் கரங்களில் ஏந்த

தாலாட்டு இசையால் இல்லம் நிறைந்திட
வாலாட்டும் உன் குறும்புகளை உள்ளம் விரும்பிட
உன் கரையும் (அழுகையும்) செவியில் இன்னிசையாய் ஒலிக்குதே
 இன்பப் புயல் கரை கடந்து தொடர் மழையாய்ப் பொழியுதே!


--------------
7.3.2020 மகா சனிப் பிரதோஷம் நாள்
முகிழ்த்தல் என்றால் தோன்றுதல்
மகவு என்றால் குழந்தை

Sunday, March 22, 2020

Staying positive during Covid19 times

Few ideas to stay positive:

https://www.forbes.com/sites/benjaminlaker/2020/03/13/how-to-be-positive-in-the-coronavirus-world/#72a895b63450

https://www.theguardian.com/lifeandstyle/2020/mar/17/silver-linings-how-to-stay-positive-during-the-coronavirus-crisis

https://www.forbes.com/sites/williamarruda/2020/03/15/9-ways-to-stay-positive-during-the-coronavirus-pandemic/#7a5890ea5a8e

One thing that works for me is to think of 3 things that I am grateful for today. For example, I felt grateful that I could do lots of house chores to help my family during the first two weeks of my newborn baby. I felt grateful that I could run 5K in nearby trail and see quite a few human faces, take in some fresh air and also build mental and physical strength. I felt grateful that I could make time to watch 20 minutes comedy videos on YouTube to bring about a change in my mood. You could share what works for you during these times.

Monday, February 24, 2020

யோகேஷ் மகன் நிதிலின் முதல் பிறந்தநாள்

தோழர் யோகேஷ் மகன் நிதிலின் முதல் பிறந்தநாளின் போது எழுதியது:


 அழகு வடிவமைத்த வாழ்த்து மடல்:



சுரேஷ் மகள் கயல் பிறப்பு

நண்பர் சுரேஷ் மகள் கயல் பிறந்த போது எழுதியது

அழகுவின் வாழ்த்து மடல் :

Tuesday, February 11, 2020

ஆயா

பத்தரை மாற்றுத் தங்கம் அவர் - பொருள்
போதாத போதும் மாறாத ஈகைக் குணத்திலே
வஞ்சம் இல்லா சிரிப்பிலே
வாஞ்சை கொண்ட வளர்ப்பிலே

வெள்ளந்தி மனம் கொண்டவர்
விவரமானவர்கள் பலரைக் கண்டிருப்பீர்
குழந்தை போன்ற குணத்தைக் கண்டதுண்டா?
வாரிக் கொடுக்கப் பாசம் உண்டெனில் பணம் எதற்கு?

கொல்லைப்புறம் கொன்னையூர் மாரியம்மன் கோயில்
நெஞ்சில் என்றென்றும் அம்மனின் நாமம்
நாவில் நாளும் அன்னையின் அருள் வாக்கு
வேறு எதுவும் வேண்டுமோ செல்வாக்கு?

செல்வம் குறைந்த போதும்
செய்தார் குறைவில்லாமல் பாலாபிஷேகம்
செல்வம் நிறைந்த போதும் எளிமை
செல்வோம் வாழ்வில் அவர்தம் வைராக்கியத்தோடு.

Wednesday, January 15, 2020

கவிஞர் கவிதா அக்காவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


ஆலமரம் போன்ற குடும்பத்தில் முதலாவதாய்ப் பிறந்து
ஆயா வீட்டிலே அன்புடனே வளர்ந்து
சுற்றத்தாருடன் மகிழ்வுடன் பழகி
சற்றும் சளைக்காமல் வாட்ஸ்அப் குழுவில் பதில்கள் தந்து

ஆரோக்கியமாக ராகி, திணை, சாமை என
அறுசுவையாக ராப்பகல் தோறும் சமைத்து
தேமதுரத் தமிழில் புதுக்கவிதைகள் புனைந்து
தேகம் சிலிர்க்கும் ஓவியங்கள் வரைந்து

சால(மிக)ப் பல கலைகள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்து
சாலா பெரியம்மா போல் சிறப்புடனே வளர்த்து
ஊக்குவித்து அனைவரையும் பாராட்டும் உங்களை
உறவுகள் கூடி வாழ்த்துகிறோம் வாழ்க பல்லாண்டு!