நீங்கள் கவிஞர் யுகபாரதி இயற்றிய "என் அன்பே நானும் நீயின்றி நான் இல்லை" என்ற பாடலை ஹாரிஸ் ஜெயராஜின் மெல்லிசையுடன் கேட்டு ரசித்திருக்கக் கூடும். பாடல் முழுவதும் எதுகை, மோனை, இயைபு (rhyme) என்று விளையாடி இருப்பார் யுகபாரதி.
என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை:
ஊடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே
ஊடு பாவாய் என்பது கவித்துவமான ஒரு உவமை. நெய்தலுக்கு ஊடு நூலும் பாவு நூலும் மிகவும் அவசியம். அதைப் பற்றி அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை ( இணைப்பு=தொடுப்பு=கொழுவி = web link) சொடுக்கிப் பாருங்கள்:
இந்தத் தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் போல ஊடு நூலும் பாவு நூலும் பின்னிப் பிணைந்து இருந்தால் தான் ஆடை நெய்ய முடியும்.
அந்த ஊடு நூலும் பாவு நூலும் பின்னிப் பிணைந்து இருத்தல் போல என்னுடைய தேகமும் காதலும் ஒன்றுடன் ஒன்றுபட்டு கிடைக்கிறது என்கிறார் கவிஞர் யுகபாரதி.
அடுத்த வரியில் கூடு பாய ஆசை - அதாவது என் உடல் என்னும் கூட்டை விட்டு உன் உடல் என்னும் கூட்டுக்குள் நுழைய ஆசையாக உள்ளது என்று அந்தப் பெண் பாடுகிறாள்.
இந்த இரு வரிகளில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள இலக்கிய நயத்தை கவனியுங்கள்:
எதுகை:
ஊடு - கூடு
தேகத்தோடு - தாகத்தோடு
மோனை:
பாவாய் - பாயும்
இயைபு:
தேகத்தோடு - தாகத்தோடு
ஓடுதே - மோதுதே
செந்தொடை:
ஊடு - கூடு
காதல் - ஆசை
ஓடுதே - மோதுதே
ஓடுதே - மோதுதே
இந்த இரு வரிகள் மட்டுமல்ல பாடல் முழுவதுமே இவ்வாறாக இலக்கிய நயத்துடன் அமைந்துள்ளது. பாடலின் வரிகள் முழுவதையும் படித்து மகிழ கீழே கொடுக்கப்பட்டுள்ள கொழுவியை (link) சொடுக்கவும்:
(பின்குறிப்பு: ஆனால், மேற்கண்ட கொழுவியில் சில பிழைகள் உள்ளன. கவிஞர் பெயரும் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.)
இந்தப் பாடலைக் கண்டு மன ஊக்கம் (inspiration) கொண்டு நான் முன்பு எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு:
நான் அடிக்கடி கவிதைகள் புனைபவன் (புனைதல் = write poem)இல்லை ஆதலால், இதை எழுதி முடிக்க வெகு நேரம் ஆனது.
No comments:
Post a Comment