Thursday, February 25, 2021

நித்தில் இரண்டாம் பிறந்தநாள் வாழ்த்து

ஓடிச் சென்று வாயிலைத் திறந்து விளையாடிக் களித்து நம்மையும் மகிழ்வித்து
தேடிப் பல புதிர்களுக்கு விடை கண்டு
நாடி பல சொற்களைச் செவ்வனே கற்று

"சிக்கி புவா வேண்டும்" என்று
செல்லமாக இறைவனிடம் வேண்டி நின்று
செம்மையாக தமிழ் மொழியைப் பயின்று
இன்று போல் என்றும் உவந்திடுவாய் நன்று!

இரண்டாம் அகவையைப் பூர்த்தி செய்த நித்திலுக்கு
இறையருள் பரிபூரணமாகக் கிடைக்க வாழ்த்துகிறோம்!

 

பாெருள்:

வாயில் = கதவு

செவ்வனே = செம்மையாக = மிகச் சிறப்பாக

உவந்திடுவாய் = மகிழ்ந்திடுவாய்

அகவை = வயது

Saturday, February 20, 2021

குமரனின் பிறந்தநாள் அழைப்பிதழ்

குறும்புக் குழந்தை குமரனின்
குதூகலமான முதல் பிறந்தநாளிது
வாழ்க்கை என்னும் பேருந்தின்
வாகான முதல் நிறுத்தமிது
தங்கமான மனம் கொண்டவர்கள்
தங்கள் நல்லாசிகளை நல்கிடுங்கள் 

பொருள் :

வாகு = அழகு

நல்குதல் = அளித்தல்

Saturday, February 6, 2021

யோகேஷ் மனைவிக்குப் பிறந்தநாள் வாழ்த்து

மனையாளாகச் சிறந்து
அன்னையாக உயர்ந்து
தோழியருடன் மகிழ்ந்து குலவி
உவப்புடன் நிதம் உலவி 
பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்

கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து

 

சாந்தம் நிலவும் முகமும்
பாசம் காட்டும் மனமும்
படிப்பில் செலுத்தும் நாட்டமும்
உடற்பயிற்சி செய்யும் திறமும்
கொண்டு பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறாேம்.

Friday, February 5, 2021

சரோஜா பிறந்தநாள் வாழ்த்து

 

ஆட்டங்கள் ஆடி, பாட்டுக்கள் பாடி 
ஆனந்த வெள்ளத்தில் திளைத்திடுவாள்
ஆர்வத்துடன் நடன அமைப்பு செய்திடுவாள்
அனைவருக்கும் இன்பத்தை விளைத்திடுவாள்

அன்புடன் தம்பியைப் பார்த்துக் காெள்வாள்
ஆவலுடன் தங்கையுடன் விளையாடிக் களிப்பாள்
பண்புடன் பெற்றவர்க்குச் சமையல் செய்வாள்
புன்னகை அணிகலன் அணிந்திடுவாள்

இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்

Tuesday, December 15, 2020

தமக்கை மகன் வருணுக்கு எட்டாவது பிறந்தநாள்

ஓட்டமும் ஆட்டமுமாய்  நண்பர்களுடன் களித்து

நாட்டம் கொண்டவற்றில் நாட்களைக் கழித்து

எட்டாம் அகவையை தொட்ட வருண்

எட்டாத உயரங்களைத் தொட்டுவிட வாழ்த்துகிறோம்

Sunday, December 6, 2020

ஊடு பாவாய் அமைந்த பாடலும் அதன் இலக்கிய அழகும்

 
நீங்கள் கவிஞர் யுகபாரதி இயற்றிய "என் அன்பே நானும் நீயின்றி நான் இல்லை" என்ற பாடலை ஹாரிஸ்  ஜெயராஜின் மெல்லிசையுடன் கேட்டு  ரசித்திருக்கக் கூடும். பாடல் முழுவதும் எதுகை, மோனை, இயைபு (rhyme) என்று விளையாடி இருப்பார் யுகபாரதி.

என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை:

ஊடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே

ஊடு பாவாய் என்பது கவித்துவமான ஒரு உவமை. நெய்தலுக்கு ஊடு நூலும் பாவு நூலும் மிகவும் அவசியம். அதைப் பற்றி அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை ( இணைப்பு=தொடுப்பு=கொழுவி = web link) சொடுக்கிப் பாருங்கள்:
இந்தத் தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் போல ஊடு நூலும் பாவு நூலும்  பின்னிப் பிணைந்து இருந்தால் தான் ஆடை நெய்ய முடியும்.

அந்த ஊடு நூலும் பாவு நூலும்  பின்னிப் பிணைந்து இருத்தல் போல என்னுடைய தேகமும் காதலும் ஒன்றுடன் ஒன்றுபட்டு கிடைக்கிறது என்கிறார் கவிஞர் யுகபாரதி.

அடுத்த வரியில் கூடு பாய ஆசை - அதாவது என் உடல் என்னும் கூட்டை விட்டு உன் உடல் என்னும் கூட்டுக்குள் நுழைய ஆசையாக உள்ளது  என்று அந்தப் பெண் பாடுகிறாள்.

இந்த இரு வரிகளில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள இலக்கிய நயத்தை கவனியுங்கள்:
எதுகை:
டு - கூடு
தேத்தோடு - தாத்தோடு

மோனை:
பாவாய் - பாயும்

இயைபு:
தேகத்தோடு - தாகத்தோடு
ஓடுதே - மோதுதே

செந்தொடை:
டு - கூடு
காதல் - சை
டுதே - மோதுதே
டுதே - மோதுதே

இந்த இரு வரிகள் மட்டுமல்ல பாடல் முழுவதுமே இவ்வாறாக இலக்கிய நயத்துடன் அமைந்துள்ளது. பாடலின் வரிகள் முழுவதையும் படித்து மகிழ கீழே கொடுக்கப்பட்டுள்ள  கொழுவியை (link) சொடுக்கவும்:
(பின்குறிப்பு: ஆனால், மேற்கண்ட கொழுவியில் சில பிழைகள் உள்ளன. கவிஞர் பெயரும் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.)
 
இந்தப் பாடலைக் கண்டு மன ஊக்கம் (inspiration) கொண்டு நான் முன்பு எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு:
நான் அடிக்கடி கவிதைகள் புனைபவன் (புனைதல் = write poem)இல்லை ஆதலால், இதை எழுதி முடிக்க வெகு நேரம் ஆனது.