Friday, November 27, 2020

வெய்யோன் சில்லி பாடலின் பொருள்

 


படத்தின் பெயர்:
சூரரைப் போற்று
வருடம்:
2020
பாடலின் பெயர்:
வெய்யோன் சில்லி
இசையமைப்பாளர்:
ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்:
விவேக்
பாடகர்:
ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்

பாடல்களில் தூய தமிழ் வார்த்தைகளைச் சேர்ப்பதில் கவிஞர் விவேக் வல்லவர்.
"கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்" (அதன் பொருள் என்னுடைய அடுத்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது:
http://muthusblog.blogspot.com/2020/12/blog-post.html?m=1) போன்ற பாடல்களை எழுதியவர். வெய்யோன் சில்லி பாடல் புரிந்துகொள்ள சற்றே கடினமானது. அதன் பொருளைத் தெரிந்து கொள்ள இணையத்தில் தேடினேன். சரியான பொருள் கிடைக்காததால் நானே எழுதியிருக்கிறேன்:

ஆண் : சீயஞ் சிறுக்கிகிட்ட
சீவன தொலைச்சிட்டேன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்

சீயம் = இனிப்புப் பண்டம்
வளவி = வளையல்
சீயம் போன்ற இனிய பெண்ணிடம் என் ஜீவனைத் தொலைத்துவிட்டேன். அவளது வளையலுக்குள் மாட்டிக் கொள்ள வளைந்து விட்டேன் (அதாவது அவளது கைப்பிடியில் நான் சிக்கி விட்டேன்).

உள்ள பட்டறைய போட்டுட்டு
ஏழரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்கிட்டு
இவ வீதியில் வாரத
வேடிக்கை பாக்கத்தான்
விழுந்த மேகங்க எம்புட்டு

எனக்குள்ளே பட்டறை போட்டு அமர்ந்துவிட்டாள் (அவள் நினைவாகவே இருக்கிறேன்). ஏழரைச் சனியைக் (தொல்லையை) கூட்டி விட்டு அவள் போய்விட்டாள். இவள் வீதியில் சென்றால் மேகங்கள் கூட  இவளைப் பார்க்க வந்துவிடும் - இவள் அவ்வளவு அழகு.

இடுக்கியே
இடுக்கியே
அடிக்கிறா
அடுக்கியே 

இடுக்கி (tongs) போல வளைவு நெளிவுகள் கொண்ட பெண்ணே! என் மனதின் நினைவலைகளை அடித்து விட்டுச் செல்கிறாயே!

வெய்யோன் சில்லி 
இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா

சூரியனின் (வெய்யோன் = சூரியன்) துண்டு (சில்லி) போன்றவள் (என் வாழ்வுக்கு ஒளி கொடுக்க வந்தவள்), தான் இருக்கும் வானத்தை விட்டு விட்டு, இப்போது நிலத்தில் வந்து  கட்டிக்கொள்ள சொல்லி அனத்துகிறாள் (நச்சரிக்கிறாள்).  கேலியாகப் (லந்தாக) பேசி என்னை அவள் பக்கம் ("ஒரு அண்டை" என்றால் "ஒரு புறமாக" என்று சென்னை பாஷையில் பொருள்) இழுக்கிறாள்.

கட்டாரி கண்ணாலே 
உட்டாளே தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால 
மப்பாகிக் கெடக்குறேன்

கட்டாரி (குத்துவாள்) போன்ற கண்களாலே என் இதயத்திற்கு உள்ளே நுழைந்து விட்டாள். நான் செய்வதறியாது நிற்கிறேன்.
ஒட்டாரம் (பிடிவாதம்) கொண்ட இந்த சிறிய பெண்ணால் நான் போதை உட்கொண்டது போல மயங்கிக் கிடக்கிறேன்.

என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

என் உயிருக்குள் நுழைந்துகொண்டு அரக்கி போல சிரிக்கிறாள். அவள் இடுப்பினில் என்னை முடிந்துகொண்டு திமிராக நடக்கிறாள்.

மல்லாட்டை ரெண்டா
என்னாட்டம் வந்தா
ஓய்

மல்லாட்டை (= நிலக்கடலை = வேர்க்கடலை) இரண்டு போல என்னை ஈர்க்கும் கச்சையணிந்த மார்பகங்களுடன் என்னிடம் வந்தாள். 

என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

என் காது ஜவ்வுல
இசையும் ஒவ்வல
நீ மட்டும் பேசடி
ஏழட்டும் நாளட்டும்
எதுவும் உண்கல
இச்சொன்னு வீசடி

என் காதுச் சவ்வுகளில் இசை கூட (ஒவ்வுதல் = பொருந்துதல்) பொருந்திப் போகவில்லை (did not fit in),  நீ பேசும் ஓசை தான் இசையாக  ஒலிக்கிறது. ஏழு, எட்டு நாட்களாக ஒன்றும் உண்ணவில்லை (உண்கல), ஒரு முத்தத்தைக் கொடுத்து விட்டுப் போ.

கன்னலு உதடு
மின்னலு தகடு
எனக்குத் தானடி
 
கன்னல் ( கரும்பு) போன்ற உன் உதடுகளும், மின்னலால் செய்த தகடு போன்ற உன் விழிகளும் எனக்குத்தான் சொந்தம். 

சட்டையில் பாக்கெட்ட தச்சது
உன்னைய பதுக்கதானடி

என் சட்டையில்  பை வைத்ததே உன் புகைப்படத்தைப் பதுக்குவதற்குத் தான்.
என் நெஞ்சில் நீ இருப்பது மற்றவர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சட்டையில் பை வைத்தார்கள் என்றும் பொருள் கொள்ளலாம். 

தின்னா - ஆணம் வெச்சு தின்னா

தின்றாள் - கறிக் குழம்பு (ஆணம்=குழம்பு) வைத்து தின்பது போல் என் உயிரை உண்டாள். 

உள்ள உன் கொக்காமக்கா நின்னா

என் மனதிற்குள் அவள்  திடமாக நின்றாள்.

ஓய்
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

தொரட்டி கொரல பெரட்டி எவ்வியே
இதயம் பறிச்சியே
கரண்டு கம்பிய சொரண்டி
கெடந்த கதண்ட எரிச்சியே

தொரட்டிக் (கைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும்  பழங்களைப் பறிக்க/ கிளைகளை வளைத்து கொடுக்க உபயோகப்படுத்தப்படும்  கொக்கிக்கோல்) குச்சியைப் புரட்டி (twist) எம்பி (jump) பழம் பறிப்பது போல் என் இதயத்தைப் பறித்து விட்டாய். 
மின்கம்பியில் உட்காரும் கருவண்டை (கதண்டு = கருவண்டு) மின்சாரம்  எரிப்பது போல் உன் மேல் கொண்ட காதலால்  ஈர்க்கப் பட்டேன் இப்போது என்னையே இழந்து விட்டேன்.

ஓ பதனம் உதற
கவனம் செதற
மனச கலைச்சியே

என் பதனம் (அமைதி) சென்றுவிட, என் கவனம் சிதறிவிட என் மனதைக் கலைத்தாய்  உன் ஈர்ப்பால்.

கருக்கப் பொழுதில்
சிரிச்சுத் தொலைச்சு
பகலப் படைச்சியே

இரவு நேரத்தில் (கருத்த பொழுதில்) நீ சிரிக்கையில் உன் பற்களின் பிரகாசத்தால் பகல் போல் ஆனது. 
என் வாழ்வு இருண்ட பொழுது போல இருந்தது நீ வரும் வரை - உன்னுடைய சிரிப்பைக் கண்டதும் பகல் போல் ஆனது என்றும் பொருள் கொள்ளலாம்.
 
தீயா இவ வந்தா
மண்டவெல்லம் துண்டா
உண்டா இந்த ஜிகர்தண்டா?

தீயாக என் வாழ்வில் இவள் வந்தாள். மண்டை வெல்லம் (அச்சு வெல்லம்) துண்டு போல வந்தாள். ஜிகர்தண்டா போல இனிப்பான இவள் எனக்கு தானா?

ஓய்
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா

கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகிக் கெடக்குறேன்